Wednesday, 2 January 2019


குகை - ஜெயமோகன் -வாசிப்பு - இராஜரெத்தினம்
 


குகை (நெடுஞ்)சிறுகதை பல்வேறு வாசிப்புச் சாத்தியங்களைக்கொண்டு சிறுகதை விளங்குகிறது
1. மனோவியல் சார்ந்த வாசிப்பு,
 2. தத்துவம் சார்ந்த வாசிப்பு,
 3. வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த வாசிப்பு 
என நான் அவற்றை வகைப்படுத்திப் பார்க்கிறேன்.

1. மனோவியல் வாசிப்பு: மனநலம் பிறழ்ந்த ஒருவனின் அடக்கப்பட்ட மனம் ஒரு திறப்பினைப் பற்றிக்கொண்டு அதை ஊடகமாகக்கொண்டு திறந்த மனத்துடன் ஒரு கட்டுபாடான ஆனால் கட்டற்ற குகை என்னும் வழியைப் பின்பற்றி உலாவுகிறது; தனக்கான வழியைத் தேடமுயல்கிறது. இறுதியில் அது தான் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைகிறது.

மனோவியல் தெரிந்தவர்கள் இதனை இன்னும் மிக விரிவாக விளக்கமுடியும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக அமையும். அதாவது ஒரு மனோவியல் பிரச்சனை எப்படி ஜெயமோகனின் கைவண்ணத்தில் ஒரு இலக்கியமாகிறது என்பதையும் அவர்கள் அறிய முற்பட்டால் அவர்களின் வாசிப்பு இன்னும் கூர்மையடையும்.

அவனின் தாய் அவனைப் புரிந்துகொண்டவளாக வருகிறாள்; மருத்துவம் பார்க்கிறாள். எனினும் அவனோடான உடையாடலை; அவனுக்கான உரையாடலைத் தவிர்க்கிறாள். அவன் மனைவியும் அவனோடு எந்த உரையாடலையும் வைத்துக்கொள்வதில்லை. ஒரு தந்தையோ குழந்தையோ இருந்திருந்தால் அவனுக்கான உரையாடல்வெளி திறக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஜெயமோகனின் பாத்திரப்படைப்பு நுட்பமாக இதனைக் கொள்ளலாம்.

எனவே பூட்டப்பட்ட மனம்; ஒவ்வாத பழைய வீட்டுச்சூழல் மற்றும் அவனை எப்போதுமே தூங்க வைக்கும் மருந்து மாத்திரை என எல்லா விசயங்களுமே அவனுக்கான வெளியைக் குறுகடித்துவிட்டிருக்கிறது.

புதிய வீட்டில் அவனுக்கான ஒரு தனியறை கிடைக்கிறது. அவனுடைய மனம் ஒரு திறப்புக்கான வெளியைத் தேடுகிறது; மனத்தைப் பிதுக்கிக்கொண்டு எண்ணம் வெளிப்படுகிறது. அதற்கான ஒரு குறியீடாக குகை அமைகிறது.

சிறுவயதில் நூலகம் மட்டுமே அவனுக்கான ஒரு வெளியாக இருந்திருக்கிறது. அவன் அப்போது ஊரையும் நன்கு சுற்றிவந்திருக்கிறான். ஒரு கட்டத்திற்குமேல்தான் மனநலம் இழந்திருக்கிறான். இந்தக் குகை அவன் சிறுவயதில் உல்லாசமாகச் சுற்றிய எண்ணங்கள் மற்றும் நூலகத்தில் படித்த வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த அறிவு இரண்டையும் வெளிப்படுத்தும் கருவியாக அமைகிறது.

குகைக்குள் வாழும் வெளிநாட்டவர்கள்கூட வரலாற்று மனிதர்களாகவே - வரலாற்றின் படிவங்களாகவே அமைகின்றனர்.

ஆழ்மனத்திற்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே ஆழ்மன வெளியெங்கும் - குகையெங்கும் காமமும் வஞ்சகமும் அறியவருகின்றன. அவனின் மனநலப்பிறழ்வு அவனின் காமத்தை வெளிப்படுத்தாமல் அடுத்தவர்களின் காமத்தை வெளிப்படுத்துகிறது. மற்றவர்களுக்கு இப்படி ஒரு குகை கிடைத்தால் அவர்களின் காமமே வெளிப்பட்டிருக்கும்.

காமத்தை எழுதுகிறவனின் கையில் இந்தக்கதைக்கரு கிடைத்தால் இந்தக்கதை ஒரு பாலியல் சார்ந்த கதையாக மாறியிருக்கும். ஆனால் ஜெயமோகனின் கைகளில் அது கலையாக வெளிப்படுவதைப்பார்க்கிறோம்.

வெளியெங்கும் அலைந்துவிட்டு அம்மனம் மீண்டும் தன் கூடடைகிறது; இந்தக் குகைவாழ்க்கையைக்கூட அந்த மென்மையான மனத்தால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை என்று தோன்றுகிறது. மனோவியல் தெரிந்தவர்கள் கொஞ்சம் ஜனரஞ்சகமாக விளக்கினால் நன்றாக இருக்கும்.

2.தத்துவவாசிப்பு:  
இங்கு பாரதியின் ஞானரதம் நினைவுக்கு வருகிறது. நித்திரையில் பாரதி ஒரு கனவு காண்கிறான். கற்பனைத் தேரில் ஏறி சொர்க்கலோகம் போன்ற ஒன்றைக்காண்கிறான். பாரதியின் கற்பனையின் எல்லையைத் தொட்ட ஒரு படைப்பு அது.
குகையில் ஜெயமோகன் ஒரு ஆழ்மனப்பயணத்தை ஆரம்பித்துவைக்கிறார்.

பாரதியின் மனம் திரிவிக்கிரமனாய் விண்ணோக்கிப் பாய்ந்தது. ஜெயமோகன் கூர்மாவதாரமாய் பூமியைத்துழைத்து உள்வழிப்பயணம் மேற்கொள்கிறார்.

பாரதிக்கு அந்தப்பயணத்தில் லௌகீக விசயங்கள் தேவைப்படவில்லை. முழுக்க முழுக்க கற்பனைப்புனைவினாலேயே நடத்துகிறார். ஆனால் ஜெயமோகனுக்கு ஒரு வாழ்க்கை தேவைப்பட்டிருக்கிறது; ஒரு வரலாறு தேவைப்பட்டிருக்கிறது. ஒரு பயணத்தை மேற்கொள்ளப்போதுமான புறக்காரணிகளை அம்மா, மனைவி என்னும் வடிவங்களில் கட்டமைக்கிறார்.

பாரதியின் கற்பனை உலகம் பரவசமானது. ஜெயமோகனின் கற்பனை உலகம் படபடப்பானது. அடிவயிற்றை எக்கிக்கொண்டே வாசிக்கவைப்பது. பாரதின் பயணமும் திரும்பவந்து கூடடைவதில் முற்றுப்பெறுகிறது. குகைப்பயணமும் மீண்டும் கூடடைகிறது.

இக்கதையில் ஒரு ஞானத்தேடல் இருக்கிறதா? உள்மனத்தை அறிய முயற்சிப்பதுதான் ஞானத்தேடல். இந்தக்குகை உள்ளொளியைத்தேடும் பயணம்தான். ஆனால் குறைபட்டமனம்; குறைபட்ட மனத்தினால் ஆன்மீகத்தின் முழுமையை உட்கொள்ளமுடியாதல்லவா. அதனால் அது எந்த வெற்றியையும் பெறாமலேயே திரும்பிவருகிறது. ஆனாலும் உள்ளோளித் தேடல் என்பது ஒரு ஆன்மீகனுக்கு அவசியமானது. இந்தத் தேடல்கள் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். ஒருநாள் அது வெற்றிபெறும்.

3.வரலாறு மற்றும் பூகோள வாசிப்பு:  
ஒரு கதையினைப்படைக்கும்போது நம்பகத்தன்மை மிகமுக்கியம் ஆகும். அதற்கான ஊடுபொருட்களாக- களனாக வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த விசயங்களை ஜெயமோகன் அமைத்துள்ளார்.

இந்தக்கதை ஒரு வட இந்திய நகரத்தில் நடக்கிறது. இந்தி பேசும் நகரம் என்பதற்கான ஒரு சிறு குறிப்புவருகிறது.

இந்தக் குகையில் காட்டப்படும் நில அமைப்பு தமிழகத்திலோ அல்லது கேரளத்திலோ இல்லாதது. நம் நிலம் கடினப்பாறைகளால் ஆனது. அவைகளில் சமணர்கள் வாழ்ந்ததைப் போன்று இயற்கைக் குகைகள்தான் உண்டாகும். செயற்கையான ஒரு நகரம் முழுவதையும் இணைக்கும் குகைப்பாதைகளை இணைக்கவே முடியாது. எனவேதாம் ஜெ.மோ. வட இந்திய நகரத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அவருடைய இந்தியப்பயணம் என்னும் நூல் இதனை விளங்கிக்கொள்ள உதவும்.

நூலகம் வாயிலாக அவர் பிரிட்டிஷ் காலத்து வரலாற்றைப் பின்புலமாக ஆக்குகிறார். கதாநாயகன் நூலகம் செல்லும் வழக்கம் உடையவனாக இருக்கிறான். அதிலும் வரலாறு சார்ந்த நூல்களைப் படிப்பவனாக இருக்கிறான்.
...................... ...................... ..........................
எங்கள் கிராமம் கன்னியாகுமரி திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான கடற்கரைப்பகுதியில் மங்களா என்று எங்களால் அழைக்கப்படும் ஒரு வித்தியாசமான கட்டட அமைப்பு உள்ளது. முழுவதும் சுதை, செங்கலால் அமைக்கப்பட்டது. மேல்கூரையும் அதே சுதையால் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட பெட்ரோல் கொண்டுவரும் கண்டெயினர் உருளைபோன்ற அமைப்புடையது.

சன்னல் போன்ற திறப்பின் வழியாக சென்று ஆடு மாடு மேய்ப்பவர்கள் ஓய்வு எடுப்பர். அந்த மங்களா பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அதன் மத்தியில் ஒரு ஆழ்துழைக் கிணற்றுக்குப் 'போர்' போட்டது போன்ற அமைப்பு இருந்தது. அது பற்றிய வாய்மொழிக்கதை உள்ளது. அது: உள்ளே பொக்கிசம் இருக்கு. ஆனா அதைப் பூதம் காக்கிறது. அதை யாரும் தோண்டிப்பார்க்கக்கூடாது. அவ்வளவுதான். அதையாரும் எந்த முயற்சிக்கும் உட்படுத்தவில்லை.

சில நேரம் சில ஆபீசர்கள் அயல்நாட்டாரோடு வந்து பார்த்துவிட்டுப் போவதைப்பார்த்திருக்கிறோம். அவர்கள் மக்களிடம் எதுவும் பேசியதில்லை. மக்களும் அது என்ன என்று கேட்டதில்லை. ஒரு கட்டத்தில் மங்களா உள்ளே யாரும் போகமுடியாதபடி சிமென்டால் சன்னல்களை அடைத்துவிட்டனர். இதே போன்ற மங்களா ஒன்று கன்னியாகுமரி அகஸ்தீசுவரம் கல்லூரிச்சாலையில் அழிந்துகிடப்பதைக் கல்லூரி செல்லும் நாட்களில் பார்த்திருக்கிறேன்.

கன்னியாகுமரி கோயில், வட்டக்கோட்டை, இந்த இரண்டு மங்களா இவற்றிற்கிடையில் குகை உறவு இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. போர்க்காலங்களில் கோட்டை தாக்கப்படும்போது தப்பிப்பதற்காக அரசர்கள் ஏற்படுத்திய குகை வழிகளாக இருக்கலாமோ?

இது போன்ற கடற்கரை நிலங்களில்மட்டுமே தமிழகத்தில் குகைகள் சாத்தியம். ஒரு நகரம் முழுமைக்கான குகைவழிப்பாதைகள் தமிழகத்தில் சாத்தியமே அல்ல. நமது கருங்கல் பாறைகளைக் குடைவது அத்தனை எளிதல்ல. அது மட்டுமல்ல அவை எளிதில் நொறுங்கக்கூடியவை. மயிலாடியில் சிற்பம் செய்யப் பயன்படுத்தும் பாறைகள் சாதாரணமானப் பாறைகள் அல்ல. அவை நொறுங்காதவை. சுசீந்திரம் சிற்பங்கள் செய்யப்பயன்பட்டுள்ள பாறைகளுக்கும் நமது சாதாரண பாறைகளுக்கும் உறவெதுவும் இல்லை. அவை நிறத்திலும் தரத்திலும் மிக வேறுபட்டவை.
............. ....................... ......................

மன அழுத்தங்கள் மிகைப்படும்போது பயணங்கள் மிக அவசியமானவை. மிக அழுத்தப்பட்ட மனம் ஒன்றின் பயணத்துக்கான புறவழிகள் அடைக்கப்படும்போது யாரும் அறியாதபடி அகவழியை அம்மனம் பயணத்துக்கான வெளியாகக்கொள்ளும். அந்தப் பயணம் பற்றிய கற்பனையை ஆங்கிலேய ஆட்சிப்பின்னணி மற்றும் இந்தியப் பயணத்தில் தான் பார்த்த நில அமைப்பு ஆகியவற்றைத் துணையன்களாகக்கொண்டு ஜெயமோகன் ஒரு அற்புதமான 'குகை'யை வடிவமைத்துள்ளார். கதைக்கூறுகளின் கலவை மிக நேர்த்தியானது. கணவனுக்கும் மனைவிக்குமான உறவிடைவெளி மட்டும் போதுமான அளவிற்கு வெளிப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். கணவன் மீதான மனைவியின் அத்தனை ஒதுக்கத்திற்கான காரணம் யாது? அது வெளிப்படுத்தப்பட்டிருந்தால் இந்தக் குகைப்பயணத்திற்கான தேவை இன்னும் அழுத்தமடைந்திருக்கும் என்று தோன்றுகிறது.

இந்தப் பதிவு எனது முதல் வாசிப்பில் எழுதப்பட்டது. ஒரு வாசிப்போடு நிறுத்தப்படமுடியாத படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை

-முனைவர் தி.இராஜரெத்தினம்






Wednesday, 31 January 2018

மகாத்மா காந்தி

காந்தி 
------------- 
Image result
சூரியனே!
உன் உதயத்தில்தானே
ஓடிப்போனது
வெள்ளை இருட்டு

ஓடிப்போனதை
உள்ளூர் மேகங்கள்
குத்தகைக் கெடுத்து
மேனி கறுத்து
உன்னை
மறைத்துப் பார்த்தன
 முடியவில்லை.

உன் அஸ்தமனத்தோடு
உன் உதய வெளிச்சத்தையும்
அஸ்தமிக்கச் செய்துவிட்டன.

உலகில் இருள்.
--- இராஜரெத்தினம்

Tuesday, 19 July 2016

மொழி எனும் விளையாட்டு - கி.நாச்சிமுத்து


மொழி எனும் விளையாட்டு
கி.நாச்சிமுத்து
வழி நடந்த களைப்பிலே மரத்தடியிலே நின்று கொண்டு ஒளவைப்பாட்டி மரக் கிளையி- லிருந்தபடி நாவல் பழம் பறித்துத் தின்றுகொண்டிருந்த ஆடுமேய்க்கும் சிறுவனிடம் "எனக்கும் சில நாவல் பழங்கள் பறித்துப் போடேன்" என்று கேட்கிறாள். "அவனோ சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா?" என்று கேட்கிறான். நாவல் பழத்திலே சுட்டதும் சுடாததும் உண்டா?தமிழ் முழுதறிந்த ஔவையோ திகைத்து நிற்கிறாள். தடுமாறுகிறாள். "என் தமிழறிவு இவ்வளவுதானா" என்று வெட்கமுறுகிறாள். ஒளைவையின் தமிழறிவைச் சோதித்தவன் வேறு யாருமல்லன், இடைச் சிறுவன் வடிவில் தோன்றிய தமிழ் முருகன்தான் என்றறிந்த மூதாட்டி தன் அறிவின் சிறுமையையும் தமிழின் ஆழத்தையும் இளமையின் சிறப்பையும் குறும்பையும் இறைவனின் பெருமையையும் உணர்ந்து இன்புற்றுப் பாடுகிறாள். இந்தக் கதையைக் காலங்காலமாகக் கேட்டு வரும் தமிழர்கள் அக்கதையில் மனதைப் பறிகொடுத்துவருகிறார்கள்.
இந்தக் கதை பல முக்கியமான கருத்துக்களை நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. அதில் ஒன்று தமிழின் பெருமை. அதுவும் புலவர்களிடமுள்ள தமிழல்ல.சாதாரணத் தமிழன் பேசுகிற தமிழ். இரண்டாவது இளமையும் குறும்பும் கலந்த குழந்தையின் மொழி விளையாட்டு. இங்கே மொழி என்பது ஆற்றல் மிக்க விளையாட்டுக்குக் களம் அமைக்கிறது. மொழியே விளையாட்டாகிறது. தமிழிலேயே புலமையின் அடையாளமாக விளங்கிய புலமைப் பெருமாட்டியே கற்றுக் கொள்ளவேண்டிய ஆழங்கள் நமக்குத் தெரிகின்றன. மொழியின் ஆற்றல் நமக்குப் புலப்படுகின்றது.
இவற்றைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு முன் முருகன் கேட்ட கேள்வியில் அடங்கியிருந்த மொழி ஆழம் என்ன? அதை எப்படி இலக்கணம் அல்லது இன்றைய மொழியியல் கொண்டு விளக்குவது?
சுட்ட பழம் சுடாத பழம் இரண்டும் பெயரெச்சத் தொடர்கள். சுடுதல் என்றால் அது செயப்படுபொருள் குன்றியவினையாக வரும்போது ஒரு பொருள் வெப்பமாக இருப்பதை- காய்வதை உணர்த்தும். .டு, உடம்பு காய்ச்சலால் சுடுகிறது. அதுவே செயப்படுபொருள் குன்றா வினையாக வரும்போது இன்னொருவருக்கு வெப்பம் ஊட்டுவதை காயச் செய்வதை எரித்தலை உணர்த்தும். .டு.அடுப்பில் வைத்த பாத்திரம் சுடுகிறது,கிழங்கைச் சுட்டும் தின்னலாம். இன்னொரு பொருள்- நெருப்பைக் கொண்டு அவித்தல் அல்லது பொரித்தல். .டு.அம்மா இட்லி சுட்டாள். பாட்டி வடை சுட்டாள். சுட்ட கிழங்கு சூடாக இருந்தால் ஊதி ஊதிச் சாப்பிடு. பிற்காலத்தில் தோன்றிய இன்னொரு பொருள் பீரங்கி துப்பாக்கி முதலியவற்றிலிருந்து குண்டுகளை வெடிக்கச் செய்தல். அண்மைக் காலத்தில் சென்னை போன்ற வட்டார வழக்கிலிருந்து பொது வழக்குக்கு வந்துள்ளது திருடுதல் என்ற பொருள். 1992 இல் வந்த க்ரியா அகராதியில் கூட இந்தப் பொருள் ஏறவில்லை. தமிழில் சொற்பொருள் மாற்றம் யாருக்கும் தெரியாமல் எப்படி வந்து சேருகிறது என்பது வியப்புத்தான்.
இங்கே சுட்ட பழம் சுடாத பழம் என்பதில் பொருளால் ஏற்பட்ட மயக்கம் (semantic ambiguity), வாக்கிய மயக்கம் (syntactic ambiguity), மொழிப்பயன்பாட்டுச் சூழல் மயக்கம் (pragmatic ambiguity) போன்றவற்றைக் காண்கிறோம். இவற்றை விளக்கலாம். பழம் சுடுகிறது உடம்பு சுடுகிறது என்பது போன்ற செயப்படுபொருள் குன்றியவினைப் பொருளில் வருகிறதா?பாத்திரம் கையைச் சுடுகிறது என்பது போன்ற செயப்படுபொருள்குன்றா வினைப்பொருளில் வருகிறதா? அல்லது பாட்டி சுட்ட வடை என்பது போன்று சமைத்துப் பொரித்த பொருளா?இத்தனைக்கும் காரணம் மண்ணில் விழுந்த நாவல் பழத்தில் ஒட்டியுள்ள மண்ணை ஊதி ஊதி அகற்றி உண்கிற போது அச் செயல் நடைபெறும் சூழல் சுட்ட பொருளைத் தின்பதைப்போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. இது சொற்பொருளுக்கு மேலே உள்ள மொழிப்பயன்பாட்டுச் சூழலில் தோன்றுகிற மயக்கம்.
இங்கே இதைச் சுடு என்ற பல பொருள் ஒரு சொல் தரும் மயக்கம் (ambiguity due to poly semy). இன்னொன்று சுட்ட என்ற பெயரெச்சம் எழுவாயாக அமைகிறதா? செயப்படுபொருளாக அமைகிறதா என்ற மயக்கம். இன்னொன்று சுடாததாகிய பழம் என்ற இருபெயரொட்டாக வரும்போது ஏற்படும் மயக்கம். இவை எல்லாம் இலக்கண ஒப்புருச் சொல் மயக்கம் (ambiguity due to grammatical homonymy). பழம் சுட்டது என்று சொல்லும்போது பழம் எழுவாய். அதிலிருந்து வருகிற பெயரெச்சம் சுட்ட பழம் என்பது. எனவே இந்தப் பெயரெச்சம் எழுவாய்ப் பொருளில் வருகிறது. சுட்ட வடை என்பதில் பாட்டியால் சுடப்பட்ட வடை அதாவது பாட்டி வடையைச் சுட்டாள் என்ற வாக்கியத்தில் செயப்படுபொருளாக வரும் வடை போலச் சுட்ட பழம் அதாவது சுடப்பட்ட பழம் (யாரோ பழத்தைச் சுட்டார்கள்) என்ற செயப்படு பொருள் பொருளைத் தரும்போது பழத்தை யாராவது சுடுவார்களா? என்ற மயக்கம் ஏற்டுகிறது. சுடாததாகிய பழமும் இருக்கலாம்தானே. அது சுடாத பழம். இது விளையாட்டாகிறது.
மொழியின் ஆற்றல்களில் இதன் விளையாட்டுப் பண்பும் ஒன்று. மொழியை ஆளத் தொடங்குகிற குழந்தைகள் இதைக் கவனிக்கிறார்கள். அதை விளையாட்டாக மாற்றுகிறார்கள். எனவே இத்தகைய விளையாட்டுக்கு இடம் கொடுக்கும் மொழிக்களங்களைத் திரட்டி மொழி கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாம். அதாவது மொழிக்கல்வியை விளையாட்டாகக் கற்பிக்கலாம். சிலேடை என்றும் யமகம் திரிபு மடக்கு என்ற சொல்லணி வகைகளாகவும் பல முறைகளில் இது இலக்கிய மொழியில் காணப்படுகிறது. தொல்காப்பியரே பிசி என்ற விடுகதையை இலக்கிய வகையாகக் குறிப்பிடுவார் (1421). தண்டியலங்காரம் (98) கோமூத்திரி, கூடசதுக்கம், மாலை மாற்று, எழுத்து வருத்தனம், காகபந்தம், வினாவுத்தரம், காதைகரப்பு, கரந்துறைசெய்யுள், சக்கரம், சுழிகுளம், சருப்பதோபத்திரம், அக்கரச்சுதகம் போன்ற 12 மொழிவிளையாட்டு வகைகளைக் குறிப்பிடும்.
இதையெல்லாம் பயன்படுத்தி மொழியின் ஆற்றலை விளையாட்டாக மாற்றுவதன் நோக்கம் ஒன்று, குழந்தைகளுக்கு மொழி விளையாட்டில் ஆர்வம் ஏற்படுத்தி மொழிக் கூறுகளைக் கற்பிப்பது இன்னொன்று. இதில் அமைந்திருக்கும் இலக்கண மொழியியல் நுட்பங்களை உயர் நிலை மாணவர்களுக்குக் கற்பிப்பது.
இத்தகைய மொழி விளையாட்டுக்களைப் புதிர் வகைகளில் ஒன்று எனலாம். இவற்றில் விடுகதை இருக்கும். .டு, அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கு எட்டும். அது உதடு (தம்பி என்று உச்சரிக்கும்போது கீழ் உதட்டுக்கு மேல் உதடு எட்டும். அண்ணனுக்கு எட்டாது. இங்கு சொல் தன்னையும் உணர்த்தும் பொருளையும் உணர்த்தும் என்ற தொல்காப்பியர் கூற்றின் படி (சொல்.பெயர்.2) சொல்லும் பொருளும் மயங்குகிற மயக்கம்). இந்தப் புதிரும் ஒலிகள் உச்சரிக்கும் முறையைச் சொல்லித்தரும் அருமையான விடுகதைப் புதிர்தான்.
இன்னொரு வகை சிலேடை. சிலேடை என்றால் இரட்டுற மொழிதல். அது அடிப்படையில் இரண்டு வகைப்படும். இத்தகைய சிலேடை என்றால் நமக்கெல்லாம் காளமேகப் புலவர் நினைவுக்கு வருவார். அவர் இத்தகைய சிலேடைகளை உதிர்ப்பதிலே வல்லவர். ஒருவரை அவர் அறிவில்லாதவன் எனத் திட்டவும் செய்வார். அச்சொல்லையே பிரித்து நீ அறிவில் ஆதவன் (சூரியன்) என்று பிரிமொழிச் சிலேடையாக்கி மகிழவும் வைப்பார். அது போலப் பலபொருள்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திச் சிலேடையும் பாடுவார். இங்கே பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் சிலேடை எப்படிப் பாடுகிறார் என்று பாருங்கள்.
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.
பாம்பு நஞ்சு பெற்றிருக்கும், தோல் உரிக்கும், நாதர் முடி அதாவது சிவன் தலையில் இருக்கும், அதன் பல் கோபத்தில் பட்டால் உயிர் மீளாது. வாழைப்பழம் நஞ்சு இருக்கும் - நைந்து கனிவாக இருக்கும், தோல் உரிபடும், வாழைப்பழம் வாழைமரத்தில் குலையில் மேற்பகுதியில் இருக்கும். பல்லில் கடிபட்டால் பழம் மீளாது. (நஞ்சு பெயர். விடம் என்ற பொருள். நஞ்சு வினையெச்சம். நைந்து இது பிரிமொழி. இலக்கண ஒப்புருச் சொல் (Grammatical Homonymy). தோல் பலபொருள் ஒரு சொல். நாதர்முடி மேலிருக்கும். வெஞ்சினத்தில் பல்பட்டால் என்ற இரண்டும் மொழிப் பயன்பாட்டு ஒற்றுமை.
இவ்வாறு அக்காலத்தில் மொழி படிக்கிற மாணவர்களிடம் சிலேடை பாடச் சொல்லி அவர்கள் மொழித்திறனைச் சோதிப்பதுண்டு. பாரதி சின்னப் பயல் என்ற இறுதி அமைத்து வெண்பா பாடச் சொன்ன காந்திமதி நாத பிள்ளைக்குக் காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல் என்று பாரதி பாடி வாயடக்கச் செய்த பாரதியின் இளங்குறும்பு நம்மை மகிழ்விக்கிறது இல்லையா? செம்மொழிச் சிலேடை என்பது சொல்லை விட்டிசைப்பதால் ஏற்படும் பொருள் வேறுபாடு வேறு வேறு வகை இலக்கண அமைப்புடையவை. பிரிபடும்போது வேறு பொருள்படும். இவை இலக்கண ஒப்புருவம் பெற்றவை. இவ்வாறு சொற்பொருள் ஆராய்ச்சி செய்து உயர்நிலை மாணவர்க்கு இலக்கணத்தையும் மொழியியலையும் கற்பிக்கலாம்.
இத்தகைய எடுத்துக்காட்டுகளைத் தமிழறிவாள் கதை முதலியவற்றில் காணலாம். இது போன்ற உண்மையான வரலாறுகளை உ.வே.சா. போன்றோர் வாழ்வில் பார்க்கலாம். அவர் மாணவர் கி.வா.. அவர்களின் சிலேடைகள் புகழ் பெற்றவை. மரியாதை இராமன் கதை போன்றவற்றிலும் கடி போன்ற இம்மொழி விளையாட்டுக்கள் உண்டு.
ஒரு செல்வர் தான் இறக்கும் முன் தன் மகன் குழந்தையாக இருப்பதைப் பார்த்துத் தன் நண்பன் ஒருவனிடம் ஆயிரம் வராகன்களை ஒப்படைத்து என் மகன் பெரியவனானதும் உனக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடு என்று கூறி இறந்து விடுகிறார். வளர்ந்து பெரியவனான செல்வர் மகன் வந்து கேட்கும்போது நண்பர் ஒரு வராகனை மட்டும் கொடுக்கிறார். ஏனெனில் உன் அப்பா நான் விரும்பியதையே உனக்குக் கொடுக்கச் சொன்னார் என்று அமைதி கூறுகிறார். ஏமாந்த அந்தப் பிள்ளை மரியாதை இராமனிடம் முறையிடுகிறான். மரியாதை இராமன் வழக்கை ஆராய்ந்து 999 வராகன்களை இளைஞனிடம் இறந்தவர் நண்பர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார். இறந்தவர் சொல்படிதானே நான் நடந்து கொண்டேன் என்று அவர் விளக்கம் கேட்கிறார். இறந்தவர் சொல்லிய படி செய்வதாக இருந்தால் உங்களுக்குப் பிடித்த அந்த 999 தான் கொடுக்க வேண்டும். எனவே தீர்ப்பு சரியே என்று விளக்கம் அளிக்கிறான் மரியாதை இராமன். இங்கே உனக்கு விருப்பமானதைக் கொடு உனக்கு விருப்பமானது உனது விருப்பம் 999, எனவே அதை அவனுக்குக் கொடுப்பதே முறை என்று விளக்கம் செய்கிறான் இராமன். இங்கே உனது விருப்பம் என்ற உடைமைப் பொருள் கொள்ளும்போது அது 999 வராகன். உனக்கு விருப்பமானது உனக்குக் கொடுக்க விருப்பம் என்று பொருள் கொண்டால் அது கொடைப்பொருள். ஏமாற்ற நினைத்த நண்பர் கொடைப்பொருள் கொள்கிறார். மரியாதை இராமன் இறந்தவர் சொல்லியதிலிருந்த உடமைப் பொருளை இனங்கண்டு தீர்ப்பளிக்கிறார். அவர் அறிவுத்திறமை அது. அதன் இலக்கண விளக்கம்தான் நாம் மேலே சொன்னது. இவ்வாறு உயர்நிலை மாணவர்க்கு இலக்கணம் கற்பிக்கவும் இவை பயன்படும்.
இதிலே இன்னொரு உயர்ந்த மொழி ஆற்றலை வெளிப்படுத்தும் யமகம் திரிபு மடக்கு போன்றவை உண்டு. அவை பிற்காலத்தில் கேலிக்கு உள்ளாக்கப்பட்டாலும் அக்காலத்தில் மொழித்திறனை அறியும் சோதனைகளாக அவை இருந்தன என்பதை அறிந்து கொண்டால் அவற்றைத் தூற்ற வேண்டியதில்லை.
விடுகதையிலே சிலேடை கலந்து வருவது ஒரு வகை. அதுதான் இன்று கடி எனப்படுகிறது. இதற்கு ஆங்கில எடுத்துக் காட்டும் கொடுத்து விளக்கலாம்.
e.g.
Question: What is black and white and red all over?
Answer: An Embarrassed zebra.
இது விடுகதை (ரிடில்). What is black and white and red(/read) all over?” “a newspaper"/ இதைக் கடி எனலாம் (conundrum). அதாவது விடுகதையில் சிலேடையையும் சேர்த்தமைப்பது. Red(read) சிவப்பு, படிக்கப்படுவது என்ற இருபொருளால் விளைந்த கடி.
இன்றைய மொழியிலே கடி சிரிப்பு என்ற ஒரு வகை குழந்தைகள் இளைஞர்கள் இடையே மிக செல்வாக்காக வழங்கி வருகிறது. இது குழந்தைகள் மொழியிலே விளையாடி அதைக் கொண்டாடுவது கண்டு நாம் எல்லாரும் அவர்களோடு சேர்ந்து சிரிக்கிறோம்.
தேளுக்கும் முடிக்கும் என்ன ஒற்றுமை? இரண்டுமே கொட்டும்
இங்கே கொட்டும் என்பது குத்தும் (கடிக்கும்) என்றும் உதிரும் என்று பொருள்படும் பல பொருள் ஒப்புருச் சொல்லால் (homonymy) ஏற்படும் சிலேடைப் பொருள். (இதைத் தேள் கொட்டினா வலிக்கும் முடி கொட்டினா வலிக்குமா? என்றும் மாற்றலாம்.) இந்தக் கடியில் மொழியின் பல அமைப்புக்களை ஒட்டி எழலாம். அவற்றில் ஓரிரண்டை மட்டும் இங்கு குறிப்பிடுவோம்.
1.கல்லாவில் இருப்பவர் :சாப்பிட்ட பில்லுக்குக் காசு கொடுக்காமல் போறீங்களே சார்?
சாப்பிட வந்தவர் : நான் தோசை தானே சாப்பிட்.டேன். பில் எல்லாம் சாப்பிடலே
(துரை. இராமகிருஷ்ணன், எரகுடி, தினமணிக் கதிர். 04.09.2011).
இது பெயரெச்சம் தரும் இலக்கண ஒப்புருச் சொல் தரும் மயக்கம். சாப்பிட்ட பில் என்பதில் பில் செயப்படுபொருள், சாப்பிட்டதற்கு பில் என்ற நான்காம் வேற்றுமை தகவுப் பொருள் என்ற இரண்டிலும் மயங்கி வந்து கடியாகிறது.
2.யுவராஜ் :டேய் பனியில் நிக்காதடா சளி புடிச்சுக்கும்.
சந்தோஷ் :நல்லாப் பாருடா….நான் பனியிலே நிக்கலை,காலில்தான் நிக்கறேன்.
(ஜி.கே.எஸ். மூர்த்தி, கோபி செட்டிபாளையம், தினமணி சிறுவர் மலர். 03,09,2011),
இது வேற்றுமை மயக்கம். ஏழாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமைக் கருவிப்பொருளில் வருவதால் ஏற்படும் மயக்கம்.
3.பட்டாசுக் கடைக்குப் போயிருந்தேன். வெடிக்காத பட்டாசையெல்லாம் கடைக்காரன் என் தலையில் கட்டிட்டான்.
நல்ல வேளை வெடிக்கிற பட்டாசைத் தலையில் கட்டியிருந்தால் தலை சிதறி இருக்கும் தப்பிச்சே போ.
(சு.சதீஸ்குமார், இராக்கி பாளையம், தினமணி சிறுவர் மணி. 1,10,2011).
இது மரபுத் தொடர்ப் பொருளை செம்பொருளாகக் கொண்டதால் ஏற்பட்ட மயக்கம்.
4.மாணவி: சார், நீங்க செய்யாத தப்புக்கு அடிப்பீங்களா?
ஆசிரியர்: சே சே அடிக்கமாட்டேன்
மாணவி: வீட்டுப் பாடம் செய்யலை சார்.
ஆசிரியர் : ???
இது சுட்ட பழம் சுடாத பழம் போன்றது. செய்யாத தப்பு என்பது தப்பைச் செய்யவில்லை என்ற செயப்படுபொருள் கொண்டு முடிந்த பெயரெச்சம். இது ஆசிரியர் கொண்ட பொருள். இரண்டாவதாக இதைச் செய்யாததாகிய தப்பு என்ற இருபெயரொட்டாக வரும் பெயரெச்சமாகவும் விளக்கலாம். (பொய்யா விளக்குப் போல (குறள்.299). இது மாணவி கொண்ட விளக்கம்.
நம்ம தமிழாசிரியரை யாரோ அடிச்சுட்டாங்களாமே? ஏன்? "இங்க தமிழாசிரியர் யாருன்னு" கேட்டதுக்கு 'அடியேன்'னு சொல்லியிருக்காரு... அதான்!'-
(வி.அப்ஜித், சென்னை 600 45 தினமணி சிறுவர் மணி 24.09.2011).
இது விட்டிசையால் ஏற்படும் பிரிமொழிச் சிலேடை
பேருந்தைப் பின்னால் தள்ளினால் என்ன நடக்கும். முன்னே போகும் என்போம் நாம். நம் குறும்புக் குழந்தை பின் வளைந்து போகும் என்று நம்மை மடக்கும்போது தமிழ்ச் சொல்லும் ஆங்கிலச் சொல்லும் கலந்து வரும் ஒப்புருச் சொல்லாகி (homonymy) விடுகிறது. இத்தகைய கலப்புக்கடிகள் இன்று பெருகி வருகின்றன. இது இன்று மொழி இருமொழியமாக மாறுவதன் அடையாளம். பழைய காலத்தில் சிலேடைகளில் வடமொழி இப்படித்தான் கலந்து வரும்.
மொழி எப்படி விளையாட்டாகவும் இருக்கிறது. ஆற்றலோடும் ஆழத்தோடும் இருக்கிறது என்பதை உணரும் நாம் இந்தக் களங்களை இனங்கண்டு தமிழைச் சுவையோடும் விருப்போடும் சொல்லிக் கொடுக்க வேண்டும்; பரப்ப வேண்டும். மொழிக் கல்வியில் குழந்தை விளையாட்டுக்கும் உயர் நிலையில் இலக்கணப் பயிற்சிக்கும் இதைத்துணையாகப் பயன்படுத்தவேண்டும்.
1920 களில்தான் ஆங்கிலத்தில் குறுக்கெழுத்துப் புதிர் வழக்கத்திற்கு வந்தது. தமிழில் 1930 களில் ஆனந்த விகடன் அதை வளர்த்தது. அதற்காக வாசன் தமிழ் அகராதியே வெளியிட்டார். பின் அது குன்றியது. இப்போது மீண்டும் தளிர் விட்டுள்ளது. ஆனால் இன்று பல மொழி விளையாட்டுகள் வழக்கத்திற்கு வந்து விட்டன. அவை பற்றி ஆராய பொழுதுபோக்கு மொழியியல் (Recreational Linguistics) தோன்றி வளர்ந்து வருகிறது.
தமிழில் புதுவை மொழியியல் பண்பாடு நிறுவனப் பேராசிரியர் த.பரசுராமன் சொல் விளையாட்டு, சொல்திறன் விளையாட்டு, சொற்பயிற்சி விளையாட்டு, கவிதை விளையாட்டு, வாக்கிய விளையாட்டு என்று பல நூல்களை (முத்து வெளியீடு, புதுவை) எழுதி வெளியிட்டுள்ளார். இவர் நூல்கள் உட்படக் குழந்தைகள் தமிழ் கற்க உதவும் தளங்கள் பற்றித் தெரிந்து கொள்ளக் கீழே கண்ட வலைத்தளத்தைப் பார்க்கலாம். thamizhagam.net.மேலும் பார்க்க. Nachimuthu K. 2004, A Linguistic Interpretation of KaTi Jokes in Tamil, IJDL.Vol.Vol xxxiii No.2 June pp.169-178.

Tuesday, 27 October 2015

இந்து நடுநிலைப்பள்ளி, எனது படம் எண்பதுகளின் தொடக்கம்.

செட்டிகுளம் இந்துநடுநிலைப் பள்ளி, திருநெல்வேலி மாவட்டம். மேல்வரிசையில்
 நான்காவதாக நான் நிற்கிறேன். இது என்னோட வகுப்பு புகைப்படம் அல்ல.
எனது வகுப்பு புகைப்படம் எடுக்கும் போது நான் இல்லை என்று நினைக்கிறேன்.
வேறு வகுப்பில் வைத்து எடுத்துவிட்டார்கள். இவர்கள் எனக்கு ஜூனியர்களாகவும்
சீனியர்களாகவும் இருந்தவர்கள். இரண்டாம் வகுப்பில் சுரண்டை வாத்தியாரிடம்
கொட்டுக் கம்பு என்னும் மூங்கில் கழியால் மண்டையில் அடிவாங்கிவிட்டு மூன்று
வருடங்கள் பள்ளிக்குப் போகாமல் மாடுமேய்க்கப் போனதினால் இவர்கள் எனக்குச்
சீனியர்களும் ஆவார்கள். இரண்டாம் வகுப்பில் என்னோடு படித்த ஆதிலிங்கம்,
முருகேசன் (பட்டேல் ஆசிரியர் மகன்), மலர்விழி, திருமணி, பாலசரஸ்வதி  ஆகிய
யாரும் இப்படத்தில் இல்லை. அப்படியானால் இது என்னுடைய வகுப்புப் படம்
இல்லைதானே. (படம் உதவி: பாலசுந்தரக் கண்ணன்.)

பாட்டி அன்னப்பழம் @ அன்னலட்சுமி

1975 ல் திருநெல்வேலிமாவட்டம் செட்டிகுளத்தில் நாங்களெல்லாம் சின்னப் பள்ளிக்கூடம் என்று அழைக்கிற
பால்வாடி @ பாலர் பள்ளியில் எங்கள் பாட்டி திருமதி அன்னப்பழம் என்கிற அன்னலட்சுமி (படம்:ஆசிரியை திருமதி சூடாமணி அவர்களுக்கு இடப்புறம் அமர்ந்திருப்பவர்) சமையல்காரராக இருந்தார். அந்தக்காலத்தில் இரண்டாம் வகுப்புவரை படித்திருந்த அவர் சிறந்த கதைசொல்லி ஆவார். சுமார் 20 வருடங்களாவது அந்தப் பள்ளியில் வேலை பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். சமைப்பதோடு நின்றுவிடாமல் குழந்தைகளுக்குச் கதைகள் சொல்வது, அவர்களைத் தூங்க வைப்பது முதலிய அனைத்து வேலைகளையும் செய்வார். இராமாயணம், மகாபாரதம், விக்ரமாதித்தன் கதைகள், பஞ்சதந்திரக்கதைகள் முதலிய கதைகளையும் வில்லுப்பாட்டுக் கதைகளையும் நன்கு அறிவார். இவரிடம் உண்ணாத, கதைகேளாத 70, 80 களைச்சேர்ந்தவர்கள் மிகக்குறைவாகவே இருப்பர். இரவில் எங்களுக்கும் கதைகள் சொல்வார். வில்லுப்பாட்டு, நாடகம், சினிமா எங்கு நடந்தாலும் என்னையும் தூக்கிக்கொண்டு செல்வார். பெரிய எழுத்துக் கதைப்புத்தகங்கள் சில இவரிடம் எப்போதும் இருக்கும். வாசிப்பதில் அவருக்கு எப்போதுமே ஆர்வம் இருந்தது.1975 என்பது காமராஜர் காலமான ஆண்டு.அந்தச் சமயத்தில் சுமார் ஒரு வயது எனக்கு இருக்கும். சென்னையில் பாட்டாபிராம் பகுதியில் இருந்த என் குடும்பம் ஊருக்கு இந்தச் சமயத்தில்தான் இடம்பெயர்ந்தது.  பாட்டி சென்னைக்கு வரவில்லை. ஊரில்தான் இருந்தார். இந்தப் புகைப்படம் எடுக்கும் போது எனக்கு ஒரு வயதுக்குள்தான் இருக்கும். ஊரில் இருந்தேனா? அல்லது சென்னையில் இருந்தேனா? என்று தெரியவில்லை. சூடாமணி டீச்சருக்கு என் பாட்டியின் மீது அன்பும் மரியாதையும் உண்டு. என்னுடைய இலக்கிய இலக்கண ஆர்வங்களின் ஊற்றுக்கால் எனது பாட்டியாகவே இருப்பார்.(படம் உதவி: பாலசுந்தரக் கண்ணன்)